கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த தந்தை, மகன் குண்டர் சட்டத்தில் கைது


ஷஹாபுதீன், ஆரிஃப் ராஜா

கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த தந்தை, மகன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை காவல்துறையினர், சில தினங்களுக்கு முன்னர் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் சந்தேகத்துக்கு உரிய முறையில் சுற்றிய இருவரைப் பிடித்து விசாரித்த போது, அவர்கள் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் பிடிபட்டவர்கள் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷஹாபுதீன் (50), அவரது மகன் ஆரிஃப் ராஜா(20) ஆகியோர் எனத் தெரிந்தது.

இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8 கிலோ 400 கிராம் கஞ்சா சாக்லேட்டுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு பாதகமான செயலில் ஈடுபட்ட இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க உத்தரவிடுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.

அதை ஏற்று முகமது ஷஹாபுதீன், ஆரிப் ராஜா ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் குண்டர் தடுப்புப் பிரிவில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து மாவட்ட காவல் துறையினர் கூறும்போது, "பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்புக்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடப்பாண்டு இதுவரை மாவட்ட காவல்துறையினரால் 33 பேர் குண்டர் தடுப்புப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.