போலீஸ் தாக்கி திருச்சி சிறுவனுக்கு கால் முறிவு: அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு


மதுரை: தலைமை காவலரால் தாக்கப்பட்ட 16 வயது சிறுவனுக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த எஸ்.அமுதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் பிரசாத் (16) மெக்கானிக் ஷாப்பிற்கு வேலைக்கு சென்று வந்தார். பிரசாத் 24.12.2016-ல் இரவில் தென்னூர் வாமடத்துக்கு ஐயப்ப பஜனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வரும் வழியில், இரவு 12 மணியளவில் கீழப்புதூர் அண்ணா அறிவகம் அருகே டீ குடித்துள்ளார்.

அப்போது அங்கு வந்த பொன்மலை காவல் நிலைய தலைமை காவலர் சுப்பிரமணி எந்த கேள்வியும் கேட்காமல் என் மகனை லத்தியால் சரமாரி தாக்கியுள்ளார். அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றபோது சுப்பிரமணி லத்தியை தூக்கி வீசியுள்ளார். அந்த லத்தி என் மகனில் கால் இடுக்கில் சிக்கியது. இதனால் மகனின் வலது காலில் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் தலைமை காவலர் சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுக்கவும், ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் முகமது காசிம் வாதிட்டார். பின்னர் நீதிபதி, மனுதாரரின் மகன் தலைமை காவலர் தாக்கியதில் காயமடைந்தது உறுதியாகிறது. மருத்துவ செலவுக்கு அதிக பணம் செலவிட்டுள்ளனர். மனுதாரரின் மகனின் வலது தொடையில் தற்போதும் வலி உள்ளது. இதனால் மனுதாரரின் மகனுக்கு தமிழக அரசு 2 மாதத்தில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.