இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த இருவர் கைது @ சென்னை


சென்னை: காதலை ஏற்க வலியுறுத்தி போஸ்டர் ஒட்டிய இளைஞர் அவரது நண்பருடன் கைது செய்யப்பட்டார். இளம்பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்ததால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரையைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர் சென்னை, மயிலாப்பூரில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு, அவரது செல்போன் வாட்ஸ் - அப் எண்ணுக்கு சில புகைப்படங்கள் வந்தது. அவரையும், அவரது சகோதரியையும் மார்பிங் செய்து, ஆபாசமாக சித்தரித்து அனுப்பப்பட்ட புகைப்படங்களாக அது இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண் இது குறித்து மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும், அவரது சகோதரிக்கும் மார்பிங் செய்து ஆபாச புகைப்படங்களை அனுப்பியது, மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த நவீன்ராஜ் (27), திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த ருத்ரமணிகண்டன் (29) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், கைது செய்யப்பட்ட நவீன்ராஜ் சில வருடங்களாக புகார் அளித்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அப்பெண் சென்னையில் தங்கி வேலை செய்வதையறிந்த அவர், சென்னைக்கு வந்து, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். காதலை ஏற்க அப்பெண் தொடர்ந்து மறுத்துள்ளார். இதனால், விரக்தியடைந்த நவீன் ராஜ் அப்பெண் தங்கி இருந்த விடுதியில் அப்பெண்ணை காதலிப்பதாக போஸ்டர் ஒட்டியுள்ளார். இதையறிந்த விடுதி காவலாளி, நவீன் ராஜை எச்சரித்து அனுப்பினார்.

ஆனால், அவர் மீண்டும் அப்பெண்ணை பின் தொடர்ந்து சென்று தன்னைக் காதலிக்கும்படி வற்புறுத்தினார். காதலுக்கு அப்பெண் பச்சைக் கொடி காட்டாததால் கோபம் அடைந்த நவீன்ராஜ், தனது நண்பர் ருத்ரமணிகண்டனுடன் சேர்ந்து சமூக வலை தளத்தில் இருந்த சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்ப புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து, அதில் அப்பெண் மற்றும் அவரது சகோதரியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, மார்பிங் செய்து ருத்ரமணிகண்டன் செல்போனிலிருந்து அப்பெண்ணுக்கு அனுப்பியது தெரிய வந்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.