தாம்பரம் அருகே கார் கண்ணாடியை உடைத்து நகை, பணத்தைப் பறித்துச் சென்ற அடாவடிக் கும்பல்


தாம்பரம்: தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் கார் கண்ணாடியை உடைத்து கத்தியால் வெட்டி நகை பணத்தை பறித்துச் சென்ற 6 பேர் கொண்ட அடாவடிக் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

தாம்பரம் அருகே வரதராஜபுரத்தைச் சார்ந்தவர் தினகரன் (35). இவரும் இவரது நண்பர்களான மணிகண்டன் (36), நடராஜன் (35), குமரேசன் (33) ஆகியோரும் விடுமுறை நாள் என்பதால் நேற்று மாலை வரதராஜபுரம் முடிச்சூர் சாலை உள்ள காலிமனையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் வீட்டிற்குச் செல்ல தங்கள் காரில் புறப்பட்டனர். அப்போது ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று இருசக்கரத்தில் வாகனத்தில் வந்து அவர்களை வழிமறித்தது.
காரின் உரிமையாளர் தினகரன் காரை நிறுத்தி என்னவென்று கேட்டார்.

அப்போது தங்கள் வைத்திருந்த கத்தியால் காரின் முன் பக்க கண்ணாடியை அந்தக் கும்பல் உடைத்துள்ளது. பின்னர், தினகரன் அணிந்திருந்த ஒரு சவரன் செயின் மற்றும் 4 சவரன் மோதிரத்தை பறித்துக் கொண்டனர். இதனை தடுக்க முயன்ற மணிகண்டனை கத்தியால் கீறிவிட்டு அங்கிருந்து ஆறு பேரும் சோமங்கலம் அருகே உள்ள எருமையூர் பகுதிக்கு தப்பிச் சென்றனர்.

கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்த தினகரன் மற்றும் மணிகண்டன் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தினகரன் சோமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அடாவடிக் கும்பலைச் சேர்ந்த 6 பேரை தேடி வருகின்றனர்.