இளைஞரை எரித்துக் கொலை செய்த கல்லூரி நண்பர் உள்பட இருவர் கைது @ கும்பகோணம்


கும்பகோணம்: கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் இளைஞரை எரித்துக் கொலை செய்த வழக்கில் அவரது கல்லூரி நண்பர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் வட்டம், அய்யாநல்லூர், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தம்பிதுரை மகன் கோகுல்(25). இவர் கும்பகோணத்தில் உள்ள மருந்துக் கடை ஒன்றில் இரவு நேர ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி இரவு வேலைக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிய கோகுல் காலையில் பணி முடித்து வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, அவரது பெற்றோர், பல இடங்களில் தேடி இருக்கிறார்கள். எங்கு தேடியும் மகன் கிடைக்காததால் 13-ம் தேதி கோகுலின் தந்தை தம்பிதுரை சோழபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார், கோகுலின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை கண்காணித்தனர்.

அதில், கடலூர் மாவட்டம், கஞ்சன்கொல்லையைச் சேர்ந்த சேகர் மகன் பிரேம்குமார் (20) மற்றும் அவரது நண்பரும், அதேப் பகுதியைச் சேர்ந்த குமார் மகன் ஆகாஷ் (20) ஆகிய இருவரும் கோகுலிடம் கடைசியாகப் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீஸார் விசாரித்த போது, கோவிலாச்சேரி, பழவாற்றங்கரை சுடுகாட்டில் கோகுலை கத்தியால் குத்தியும் கயிற்றால் கழுத்தை நெரித்தும் கொலை செய்து எரித்ததாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்ற போலீஸார் அங்கிருந்து கோகுலின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், கல்லூரி நண்பர்களான கோகுலுக்கும் பிரேம்குமாருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

இதில் ஆத்திரம் கொண்ட பிரேம்குமார் தனது நண்பரான ஆகாஷை துணைக்கு அழைத்துக் கொண்டு கோகுலை கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது விஷயமாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.