குளித்தலை: தடை செய்யப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருட்களுடன் இளைஞர் கைது


இளைஞர் கைது

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை மொபட்டில் எடுத்துச் சென்ற இளைஞரை குளித்தலை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசியமங்கலம் 3 ரோடு அருகே குளித்தலை போலீஸார் நேற்றிரவு (வியாழக்கிழமை) வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அந்த நபர் தடை செய்யப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருட்களை கொண்டு செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, மணப்பாறை வட்டம் நரியம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (33) என்ற அந்த நபர் மீது குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ததுடன் அவர் எடுத்து வந்த புகையிலைப் பொருட்களையும் அவரது மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.