கூடுவாஞ்சேரி அருகே சொத்து பிரச்சினையால் ஒருவர் வெட்டிக் கொலை


செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டு நல்லூர் பகுதியில் குடும்ப சொத்து பிரச்சினை காரணமாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கொலையில் சம்பந்தப்பட்ட நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டு நல்லூர் ஊராட்சி தர்காஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உத்திராடம்(56). நங்கநல்லூர் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணிபுரிந்து வந்தார். இவரது சகோதரர் சங்கர். இவர்களுக்கு இடையே குடும்ப சொத்தை பிரித்துக் கொள்வதில் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உத்திராடம் இன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக தர்காஸ் நகர் பகுதியில் உள்ள ஏரிக்குச் சென்றுள்ளார். அப்போது, சங்கரின் மகன் சுபாஷ் என்பவர் அவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில், பலத்தகாயமடைந்த உத்திராடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீஸார் விரைந்து சென்று உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து தப்பிச்சென்ற சுபாஷைத் தேடி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், அண்ணன் - தம்பிக்கு இடையில் இருந்த சொத்துப் பிரச்சினையே இந்தக் கொலைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. சொத்து பிரச்சினை காரணமாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.