காளையார்கோவில் அருகே அரசு மதுக்கடை விற்பனையாளர் மீது மிளகாய்பொடி தூவி ரூ.2.67 லட்சம் கொள்ளை


மறவமங்கலம் டாஸ்மாக் ஊழியர்கள் தினகரன், முருகானந்தம்.

சிவகங்கை: காளையார்கோவில் அருகே அரசு மதுக்கடை விற்பனையாளர் மீது மிளகாய்பொடி தூவி ரூ.2.67 லட்சம் கொள்ளையடித்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலம் பகுதியில் அரசு மதுபானக் கடை (எண்: 7661) உள்ளது. இக்கடையில் மேற்பார்வையாளராக முள்ளியரேந்தலைச் சேர்ந்த தினகரன் (46), விற்பனையாளராக விஜயன் குடியைச் சேர்ந்த முருகானந்தம் (50) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் இருவரும் கடையில் இருந்து ரூ.2.67 லட்சத்தை எடுத்து கொண்டு காளையார்கோவிலில் உள்ள தேசிய வங்கியில் செலுத்த இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

வாகனத்தை முருகானந்தம் ஓட்டினார். பணத்தை பின்னால் அமர்ந்திருந்த தினகரன் வைத்திருந்தார். மண் பாதையில் சிறிது தூரம் சென்றபோது, அவர்களை தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வழிமறித்துள்ளனர். பின்னர் தினகரன் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு பணம், மொபைல் போனை பறித்து கொண்டு தப்பிக்க முயன்றனர். அவர்களை முருகானந்தம் விரட்டி பிடிக்க முயன்றபோது வாளை காட்டி மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர். காளையார்கோவில் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில்" ஊழியர்களை தாக்கிவிட்டு கொள்ளையடித்ததை கண்டிக்கிறோம். கொள்ளையடித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மதுக்கடையில் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை வங்கியில் செலுத்த செல்லும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்றனர்.

ஏற்கெனவே கடந்த மாதம் காரைக்குடி நகை வியாபாரியை தாக்கிவிட்டு முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் 75 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது. குற்றவாளிகளை பிடித்த நிலையில் இம்மாதம் 9-ம் தேதி சிவகங்கை அருகே மதகுபட்டியில் நகை அடகு கடையில் துளையிட்டு 300 பவுன், ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது.

தற்போது டாஸ்மாக் ஊழியர்களிடம் பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து கொள்ளையும், திருட்டும் நடந்து வருவதால் சிவகங்கை மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.