துக்க நிகழ்வுக்கு சென்றவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு @ காஞ்சிபுரம்


பணம் திருட்டு | கோப்பு படம்

படப்பை: படப்பை அருகே ஆதனூர் கிராமத்தில் துக்க நிகழ்வுக்கு சென்றவரின் வீட்டில் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள ஆதனூர் ஊராட்சி ஆர்.கே.எஸ் அவென்யூ, பிரவீன் என்கிளேவ் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி (45). கட்டிட மேஸ்திரியான இவரது உறவினர் விழுப்புரம் மாவட்டத்தில் இறந்து விட்டதால் இரண்டு தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் அவர் துக்க நிகழ்வுக்குச் சென்றுள்ளார்.

துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் நேற்று இரவு நாராயணசாமி வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பதற்றத்துடன் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 14 சவரன் நகை, 200 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து நாராயணசாமி மணிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துக்க நிகழ்வுக்கு சென்றவரின் வீட்டில் கொள்ளையர்கள் கை வரிசைகாட்டிய சம்பவம் படப்பை மற்றும் ஆதனூர் பகுதில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.