முன்விரோதம் காரணமாக பெண் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது @ டி.பி. சத்திரம்


கைதானவர்கள்

சென்னை: டி.பி. சத்திரம் பகுதியில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து வீசிச் சென்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

சென்னை, டி.பி.சத்திரம், 9-வது குறுக்கு தெரு ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி அமலா, கடந்த ஜுன் 9ம் தேதி இரவு சுமார் 11.00 மணியளவில் அவரது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் அமலாவை தகாத வார்த்தைகளால் பேசி, தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ கொளுத்தி அமலா வீட்டின் மீது வீசினர்.

பெட்ரோல் நிரம்பிய பாட்டில் சாலையில் வெடித்து சிதறியது. இதில் யாருக்கும் காயமில்லை. அந்த இரண்டு நபர்களும் அமலாவையும் அவரது கணவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து அமலா கொடுத்த புகாரின்பேரில், K-6 டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

K-6 டி.பி. சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழு தீவிர விசாரணை செய்து பெட்ரோல் குண்டு வீசிய குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட அமைந்தகரையைச் சேர்ந்த அந்தோணி மகன் சந்தோஷ்குமார் (எ) ஜண்டா (22), டி.பி. சத்திரம், ஜோதியம்மாள் நகர் 6 வது தெருவைச் சேர்ந்த புருஷோத்தமன் மகன் மனோஜ்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.

விசாரணையில் ஏற்கனவே சந்தோஷ்குமார் அமலாவிடம் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அமலா கொடுத்த புகாரின் பேரில் K-6 டி.பி.சத்திரம் காவல் நிலைய போலீசாரால் சந்தோஷ்குமார் கைது செய்து சிறைக்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, சந்தோஷ்குமார் அவரது கூட்டாளியுடன் சேர்ந்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் சந்தோஷ்குமார் மீது 5 குற்ற வழக்குகளும், மனோஜ்குமார் 4 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.