எதிர்தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக வழக்கறிஞர் கொலை: நண்பர் உட்பட மூவர் கைது @ திருவான்மியூர்


கவுதம்

சென்னை: திருவான்மியூரில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது நண்பர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவான்மியூர் அவ்வை நகரை சேர்ந்தவர் கவுதம் (24). சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு அவர் அதேபகுதி திருவள்ளுவர் சாலையில் உள்ள ஏடிஎம் மையம் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கவுதமை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டுச் சென்றது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கவுதமின் நண்பர்கள் அவரை மீட்டு அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் உயிரிழந்தார். இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் கவுதம் கொலை தொடர்பாக சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கமலேஷ் (27), கொட்டிவாக்கம் நித்தியானந்தம் (27) பெரும்பாக்கம் பார்த்திபன் (31) ஆகிய மூன்று பேர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கவுதம் கடந்த சில ஆண்களுக்கு முன்பு கொட்டிவாக்கம் இளங்கோ நகரில் வசித்து வந்துள்ளார். வழக்கறிஞரான பின்பு கண்ணகி நகருக்கு இடம்பெயர்ந்துள்ளார். ஆரம்பத்தில் தற்போது கொலை செய்யப்பட்ட கவுதமும், கைதான கமலேசும் நண்பர்களாக இருந்துள்ளனர். பின்பு அவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

இந்நிலையில் கவுதம், கமலேசுக்கு எதிராக உள்ளவர்களின் வழக்குகளை கையாண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் கவுதம் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.