அச்சுறுத்தும் இளம் குற்றவாளிகள்: என்ன செய்யப் போகிறது அரசு?


பூமிநாதனுக்கு அஞ்சலி

“தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சட்டவிரோதிகளின் ஆட்சி நடக்கிறதா?” என்று ஓபிஎஸ்ஸும், “இந்த விடியா அரசில் காவலர்களுக்கேப் பாதுகாப்பில்லை என்பது நிதர்சனம் ஆகியிருக்கிறது” என்று ஈபிஎஸ்ஸும் தனித்தனியே அறிக்கைவிட்டு திமுக அரசை கண்டித்திருக்கிறார்கள். காரணம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை, வாகன ஆய்வாளர் கனகராஜ் அடையாளம் தெரியாத வாகனத்தை ஏற்றிக் கொலை, மதுரையில் பட்டப்பகலில் அரசுப் பேருந்தை வழிமறித்து டிரைவர் கையை வெட்டியது என்று அடுத்தடுத்த நாட்களில் நடந்த 3 சம்பவங்கள்.

மதுரையில் இரட்டைக் கொலை, திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் பழிக்குப் பழியாக தலை துண்டித்துக் கொலை, சோழவந்தானில் மனைவி கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவரை மனைவி வீட்டாரே கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்ட முயன்றது, ஆண்டிபட்டியில் அரசு மருத்துவமனை செவிலியர் கொலை, குமரியில் சாதி மாறி திருமணம் செய்தவர் ஆணவக் கொலை, திருவாரூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் வெட்டிக் கொலை, திருச்சி திருவானைக்காவில் திமுக வட்டச் செயலாளருக்குக் கத்திக்குத்து.

இந்தச் சம்பவங்களை எல்லாம் கோத்துப்பார்த்தால், அதிமுக ஒருங்கிணைப்பாளர்களின் குற்றச்சாட்டை உதாசீனப்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது. அதேநேரத்தில், கடந்த அதிமுக ஆட்சியில் இப்படியான குற்றங்களே நடக்கவில்லையா என்கிற கேள்வியும் எழுகிறது. திருச்சியில் கே.என்.நேருவின் சொந்தத் தம்பி ராமஜெயம், அதிமுக அரசு பொறுப்பேற்ற அடுத்த ஆண்டே (29.3.2012) கொடூரமாகக் கொல்லப்பட்டார். ஒன்பதரை ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதும் இங்கே நினைவுக்கு வருகிறது.

ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி சித்தண்ணன்

"தமிழகம் முழுதும் ஒரு குறிப்பிட்ட கும்பல், திட்டமிட்டு கொலை செய்கிறது, கொள்ளையடிக்கிறது, போலீஸாரால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியவில்லை, மக்கள் பீதியில் இருக்கிறார்கள் என்றால்தான் அதைச் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என்று சொல்லலாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக தனித்தனி நிகழ்வாக நடைபெறுகிற குற்றங்களை எல்லாம் சேர்த்துச்சொல்லி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று யார் சொன்னாலும் அது அரசியல்தானே ஒழிய, உண்மையல்ல.

சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை நிச்சயமாக அதிர்ச்சிக்குரியதுதான். பிடிபட்டவர்கள் சிறுவர்கள்தானே என்று அந்தக் காவல் அதிகாரி கொஞ்சம் அசிரத்தையாக இருந்துவிட்டார். அந்த ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்று சொல்வதை எல்லாம் ஏற்கவே முடியாது. இப்போது மட்டுமல்ல கடந்த ஆட்சியில் குமரி மாவட்டம் களியக்காவிளையில் இதேபோல வில்சன் என்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மத அடிப்படைவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டும், வெட்டப்பட்டும் கொல்லப்பட்டாரே? அதற்காக அந்த ஆட்சியில் காவலர்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்று சொல்ல முடியுமா? காவல் துறை நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியினரோ, எதிர்க்கட்சியினரோ மூக்கை நுழைக்காமல் அவர்களைச் சுதந்திரமாகச் செயல்படவிட்டாலே சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் வந்துவிடும்" என்கிறார் முன்னாள் காவல் துறை அதிகாரி சித்தண்ணன்.

மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி போன்றவர்களோ, "தமிழகக் காவல் துறையினருக்குத் திறமை போதாது என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரானது தமிழக போலீஸ் என்று சொல்லப்பட்டதெல்லாம் ஒரு காலம். இப்போது குற்றவாளிகள் தங்கள் திறமையை எவ்வளவோ வளர்த்துவிட்டார்கள். போலீஸாரோ இன்னும் அப்படியே இருக்கிறார்கள்.

உதாரணமாக, சிறுவர்களால் கொலைசெய்யப்பட்ட எஸ்எஸ்ஐ பூமிநாதன் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட்டதற்காக முதலமைச்சரின் விருது பெற்றவர். அவரையே ஆடு திருடுகிறவன் அடித்துக்கொன்றுவிட்டான் என்றால், மற்ற காவலர்களின் நிலை என்ன? இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ரோந்து செல்லும் போலீஸார் துப்பாக்கியை எடுத்துச்செல்ல உத்தரவிட்டிருக்கிறார் டிஜிபி. நல்லவேளை அந்த எஸ்எஸ்ஐ துப்பாக்கி கொண்டுபோகவில்லை. இல்லையென்றால், அதைப்பிடுங்கியே அந்தச் சிறுவர்கள் சுட்டாலும் சுட்டிருப்பார்கள்" என்கிறார் தமிழ்மணி.

எஸ்.ஐ, மாதய்யனுக்கு முதல்வர் பாராட்டு.

கொலை வழக்கில் சிக்குபவர்கள் வழக்கு விசாரணை முடியும் முன்பே, அதாவது கைது செய்யப்பட்டு 90 நாட்கள் ஆகிவிட்டாலே ஜாமீன் கொடுக்கலாம் என்கிற விதியை மாற்ற வேண்டும். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். காவல் துறைக்கு நவீன ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்று நிறைய பேர் விதவிதமாக ஆலோசனை வழங்குகிறார்கள்.

இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டபோது, "ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்துள்ளபடி, 400 பேருக்கு ஒரு போலீஸ் இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டின் மக்கள்தொகைக்கு இங்கே 2.40 லட்சம் போலீஸ் தேவை. ஆனால், வெறும் 97 ஆயிரம் போலீஸாரை வைத்துக்கொண்டு தமிழகத்தில் இந்த அளவுக்குச் சட்டம் - ஒழுங்கைப் பராமரித்துக்கொண்டிருக்கிறோம். அதிமுக ஆட்சியில் பெரும் எண்ணிக்கையிலான போலீஸாரை முதல்வரின் சுற்றுப்பயணத்தின்போது, பந்தோபஸ்து பணியில் ஈடுபடுத்தினார்கள். ஆனால், எங்கள் முதல்வர் ஸ்டாலினோ தனது பந்தோபஸ்தைக் குறைத்துக்கொண்டு அந்தக் காவலர்களை எல்லாம் ரோந்துப் பணிக்குப் பயன்படுத்தச் சொல்லியிருக்கிறார்.

காவலர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடாது என்பதற்காக, வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வுதரும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். சும்மா இந்த அரசை குற்றம்சொல்ல வேண்டும் என்பதற்காக ஓரிரு சம்பவங்களை பூதாகரப்படுத்திப் பேசுவது தவறு. எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்ட மறுநாளே, அதேபோல குற்றவாளிகளை விரட்டிச்சென்று கைதுசெய்த போலீஸ் அதிகாரி மாதய்யனை முதல்வர் நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். அதைக் குறைசொல்பவர்கள், இதைப் பாராட்ட வேண்டாமா?” என்றார்.

இ.பினேகாஸ்

குற்றங்கள் குறைய வழி

பழிக்குப் பழி சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் கடந்த மாதம் 23-ம் தேதி இரவு முதல், மாநிலம் முழுவதும் storming operation என்ற பெயரில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது தமிழக போலீஸ். அப்படி வெறும் மூன்றே நாட்களில், 21,592 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 3,325 பேர் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து 7 நாட்டு துப்பாக்கிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் என மொத்தம் 1,117 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டதுடன், மற்றவர்கள் நன்னடத்தை உறுதிமொழி கடிதம் பெறப்பட்டு நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டார்கள்.

இத்தனையும் நடந்தபிறகுதான், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. ஆக, பழைய குற்றவாளிகள் மீதுதான் அரசின் கவனம் இருக்கிறதே ஒழிய, புதிய குற்றவாளிகள் எப்படி உருவாகிறார்கள் என்பதுபற்றி காவல் துறை கவனம் எடுத்துக்கொள்ளவில்லை என்றே கருத வேண்டியதிருக்கிறது.

தமிழகத்தில் பெருகிவரும் குற்றங்களைக் குறைக்க ஆக்கபூர்வமான யோசனை என்ன என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இ.பினேகாஸிடம் கேட்டபோது, "பொதுவாக நாம் குற்றவாளிகளை ஒடுக்குவதில் காட்டுகிற அக்கறையை, புதிய குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்கும் பணிக்கு காட்டுவதில்லை. ஒரு பிள்ளை, 2 பிள்ளையை வளர்க்கும் பெற்றோர்களாலேயே தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க முடியவில்லை, வழிதவறும்போதே கண்டுபிடிக்க முடியவில்லை, நல்வழிப்படுத்த முடியவில்லை என்றால், எங்கோ இருக்கிற காவல் துறையும், நீதித் துறையும், அரசு நிர்வாகமும் எப்படி நல்வழிப்படுத்த முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அரசு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் குறைகளைச் சொல்லி, பெற்றோர்கள் தங்களது பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க முடியாது. பள்ளி, கல்லூரிகளில் நல்லொழுக்கக் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். கவுன்சிலிங்கும் தர வேண்டும். வீட்டில் அம்மா, அப்பாவுக்கு இடையே சண்டை என்றால் என்ன செய்வதென்று தெரியாமல் வன்முறையில் இறங்குகிற பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களை இந்த நல்லொழுக்கக் கல்வியால் சரிசெய்ய முடியும்.

சந்தர்ப்பச் சூழல்களால் விபத்துபோல ஒரு தவறு செய்துவிடுகிற பிள்ளைகளை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு, கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்புகிறோம். அங்கே போய் அவர்கள் திருந்துவதைவிட, இன்னும் மோசமாகும் சூழல்தான் இருக்கிறது. இந்த கூர்நோக்கு இல்லங்கள் மீது அரசும், குழந்தைகள் நல ஆணையமும் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக சமூகத்தில் கடுமையான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. கரோனா அதை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது. அதைச் சீர்படுத்த வேண்டியதும் அவசியம். முன்னெப்போதையும்விட இப்போது பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. அதை மாணவர்களுக்கு விற்கிற வேலையையும் மாணவர்களை வைத்தே செய்கிறார்கள். எனவே, காவல் துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தி பள்ளி, கல்லூரிகளை கண்காணித்து இதைத் தடுக்க வேண்டும்.

இப்படியான பணிகளைச் செய்தால்தான் எதிர்காலத்தில் குற்றங்களைக் குறைக்க முடியும். திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது எனவே சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதெல்லாம் அபத்தமான வாதங்கள். அந்தச் சிறுவர்கள் ஆடு திருடும் அளவுக்கு வறுமையையும், அது தவறென்று தெரியாத அளவுக்குக் குடும்பச் சூழலும் ஏற்பட்டிருக்கிறது. ‘நோய் நாடி நோய் முதல் நாடி’னால்தான் குற்றங்களைத் தடுக்க முடியுமே தவிர, வெறுமனே அரசியல் செய்வதால் பலனொன்றும் கிடைக்கப்போவதில்லை" என்றார்.

தொடர்ந்து ஆட்சிசெய்ய விரும்பும் முதல்வர் ஸ்டாலின், சட்டம் - ஒழுங்கு விஷயத்தில் உடனே செய்ய வேண்டியவை நிறையவே இருக்கின்றன!

x