பூமிநாதன் படுகொலை: குற்றவாளிகளை விரைந்து பிடித்த போலீஸார்


பூமிநாதன்

மணிகண்டன்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் ஆடு திருடியவர்களை பிடித்த நவல்பட்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், திருடர்களால் நேற்று அதிகாலை வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலை நடந்த 24 மணிநேரத்துக்குள் தனிப்படை போலீஸார், கொலையாளிகளைப் பிடித்துள்ளனர்.

பூமிநாதன் உடல் அடக்கம்

இந்த வழக்கு தொடர்பாக நெடுஞ்சாலைகளில் இருந்த சிசிடிவி கேமராக்களையும், கொலைநடந்த பள்ளத்துப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் பூமிநாதன் திருடர்களை விரட்டிச்செல்வதும், ஒருமணிநேரம் கழித்து திருடர்கள் மட்டும் திரும்பிச்செல்வதும் பதிவாகியிருந்தது. அதில் தென்பட்ட முகங்களை வைத்து, தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி துப்பு துலக்கினர்.

கொலையாளிகள், தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகேயுள்ள தோகூரைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறிந்தனர். அதையடுத்து நேற்று இரவே, தோகூர் சென்ற தனிப்படை போலீஸார் 10 வயது மற்றும் 17 வயது கொண்ட 2 சிறுவர்கள் உட்பட மூவரைப் பிடித்து தனியிடத்துக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் சென்ற இருசக்கர வாகனம், ஆடுவெட்டும் கத்தி ஆகியவற்றையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

பூமிநாதன்

கைதானவர்களில் சிறுவர்களைத் தவிர 19 வயது மணிகண்டன், ஏற்கெனவே ஆடுதிருட்டு உட்பட பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர் என்கிறார்கள். விசாரணைக்குப் பிறகு இவர்கள் மூவரும் இன்று மாலைக்குள் கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் எனத்தெரிகிறது.

இவ்விவகாரத்தில் திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட போலீஸார் அரசின்மீது அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சிறப்பு உதவி ஆய்வாளரைக் கொன்றவர்களை உடனே என்கவுன்ட்டர் செய்ய வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் குறிப்பிட்ட பிரிவினரைச் சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சினையாகலாம் என மேலிடம் அதற்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

x