மதுரை: ஆசிரியரிடம் ரூ.16.64 லட்சத்தை மோசடி செய்த நபர் மீது வழக்குப் பதிவு


மதுரை: சென்னையில் ஒரு வீட்டு மனைவி வாங்கினால், மற்றொன்று இலவசம் என ஆசை வார்த்தை கூறி, மதுரையில் ஆசிரியரிடம் ரூ. 16.64 லட்சம் மோசடி செய்த நாமக்கல் நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளக்து.

மதுரை தாசில்தார் நகரை சேர்ந்தவர் ஜெயமங்கலம் (64). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கடந்த 2019-ல் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஆசிரியர் ஜெயமங்கலத்தை அணுகியுள்ளார். அவர் சென்னையில் வீட்டு மனை வாங்கி தருவது தொடர் பாக பேசியுள்ளார்.

ஒரு வீட்டு மனை வாங்கினால், மற்றொரு வீட்டு மனை இலவசம் என்ற அடிப்படையில் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார். இவரது வார்த்தையை ஜெயமங்கலமும் நம்பி, வீட்டு மனை வாங்க ரூ. 16.64 லட்சத்தை 2019 அக்டோபர் 1ம் தேதி கண்ணனிடம் கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கிய கண்ணன் வீட்டு மனைகள் வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். கொடுத்த பணத்தை திருப்பியும் தராமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்துள்ளார். இது தொடர்பாக ஜெயமங்கலம் மதுரை நீதிமன்றத்தை அணுகி, கண்ணன் மீது வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில் மோசடியில் ஈடுபட்டதாக கூறி, கண்ணன் மீது அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.