வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு பெண் கொலை


மாதிரிப் படம்

மும்பையில் ஒரு பெண், பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று (செப்டம்பர் 10) அதிகாலை மும்பையின் சகிநாகா பகுதியில் கைரணி சாலையிலிருந்து காவல் துறையின் அவசர உதவி எண்ணை அழைத்த ஒருவர், ஒரு பெண் கொடூரமாகத் தாக்கப்படுவதாகத் தெரிவித்தார். காவல் துறையினர் அங்கு விரைந்தபோது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ அருகில் ரத்த வெள்ளத்தில் ஒரு பெண் கிடப்பதைக் கண்டனர். கனமான இரும்புக் கம்பியால் அந்தப் பெண் சித்திரவதை செய்யப்பட்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ராஜாவாடா மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், தீவிர சிகிச்சை அளித்தும் அந்தப் பெண் உயிரிழந்தார். இதையடுத்து அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போலீஸார் மோகன் சவுகான் (45) என்பவரைக் கைதுசெய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் கடும் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது. மிகவும் கண்டிக்கத்தக்க, அவமானகரமான இந்த குற்றத்தைச் செய்தவர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் அலுவலகம் அறிவித்திருக்கிறது.

x