சென்னை | மனைவி மீது தாக்குதல் குற்றச்சாட்டு; முதல்நிலை காவலர் பணி நீக்கம்: காவல் ஆணையர் நடவடிக்கை


சென்னை: மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த முதல் நிலைக் காவலரைப் பணி நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் குருவிகுளத்தை சேர்ந்தவர் ரத்னகுமார். இவர் சென்னை வளசரவாக்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்து வந்தார். அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த 2021-ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில் ரத்னகுமார், மனைவியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்து, தாக்கியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அவர் மனைவி, தென்காசி மாவட்டத்தில் உள்ள குருவிக்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் மனைவியைத் தாக்கியதாகவும், அவதூறாகப் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ரத்னகுமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ரத்னகுமார் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார். அதே வேளையில் துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ரத்னகுமாரை பணிநீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.