‘பாண்டிச்சேரி ஜூஸ்’ என்று கூறி நூதன முறையில் சாராயம் விற்ற தந்தை - மகன் கைது @ பந்தநல்லூர்


திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர், நல்லதாடியில், பாண்டிச்சேரி ஜூஸ் என்று சொல்லி சாராயத்தை நூதன முறையில் விற்பனை செய்த தந்தை-மகனை போலீஸார் கைது செய்தனர்.

நல்லதாடி கிராமப் புறப் பகுதிகளில் வெளி மாநில சாராயத்தை சிலர் பாண்டிச்சேரி ஜூஸ் என்ற பெயரில் நூதன முறையில் தயாரித்து விற்பனை செய்து வருவதாக, பந்தநல்லூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று அதிகாலை அந்தக் கிராமத்திற்குச் சென்ற போலீஸார் ரகசியமாகக் கண்காணித்த போது, குளிர்பானம் விற்பனை செய்வது போல், பாண்டிச்சேரி ஜூஸ் என்ற பெயரில் புதுச்சேரி சாராயத்தை பாக்கெட்டுக்களில் அடைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த சாராயப் பாக்கெட்டுக்களை விற்பனை செய்த, நல்லதாடி, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அழகர் மகன் செல்வராஜ் (58), அவரது மகன் செல்வமணி (29) ஆகியோரைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட சாராயப் பாக்கெட்டுக்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.