கோவை விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் வீரர் தற்கொலை: போலீஸார் விசாரணை


கோவை: கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குழுவாக சுழற்சி முறையில் இவர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து விமான நிலைய வளாகம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர்.

இன்று காலை 9.05 மணியளவில் விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் சிஐஎஸ்எஃப் போலீஸ் சக்ரதார் (34) தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற பீளமேடு போலீஸார், சக்ரதாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். விமான போக்குவரத்து அதிகமாக இருக்கும் காலை நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு நிலவியது.