மேலூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.88 லட்சம் பணம் பறிமுதல்


அருள் முருகன்

மேலூர்: மேலூர் அருகே கருங்காலக்குடி துணைப் பதிவாளர் அருள் முருகனுக்காக ரூ.1.88 லட்சம் லஞ்சப் பணம் வசூலித்ததாக துணைப் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா கருங்காலக்குடியில் செயல்படும் துணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எழுத்தர்கள், புரோக்கர்கள் வழியாக லஞ்சப் பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன், ஆய்வாளர்கள் ரமேஷ்பாபு, குமரகுரு உள்ளிட்ட போலீஸார் நேற்று கருங்காலக்குடி துணைப் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இச்சோதனையில் துணைப் பதிவாளர் அலுவலக அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.1.88 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர்.

இது தொடர்பாக துணைப் பதிவாளர் அருள் முருகன் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல் விசாரணை நடத்தினர். இத்தொகை யாரிடமிருந்து, யாருக்காக வசூலிக்கப்பட்டது என்ற கோணத்திலும் விசாரித்தனர். இதில் துணைப்பதிவாளர் அருள் முருகனுக்காக லஞ்ச பணம் வசூலிக்கப்பட்டது தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மேலூர் மூவேந்தர் நகர் 2-வது தெருவிலுள்ள அருள் முருகனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.