உடுமலை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு


வினோத் , மிதுன்ராஜ் 

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே மாயமான சிறுவர்கள் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகேயுள்ள பண்ணைக்கிணறு ராமச்சந்திரனின் மகன் மிதுன்ராஜ் (11). அதேபகுதியை சேர்ந்த முருகன் மகன் வினோத் (12). இருவரும் நண்பர்கள். கடந்த 28-ம் தேதி இருவரும் விளையாடச் சென்றனர். அதன் பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், இருவரையும் காணவில்லை என அவர்களது பெற்றோர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், கோமங்கலம் அருகே உள்ள குட்டையில் இன்று இரண்டு சிறுவர்களின் உடல்கள் மிதப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுவர்களின் உடல்களை மீட்டனர். இருவரும் காணாமல் போன மிதுன்ராஜ், வினோத் என்பது தெரிய வந்தது.

சிறுவர்கள்குட்டை அருகே விளையாடச் சென்ற நிலையில் குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக குடிமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.