கோவை - மதுக்கரையில் கஞ்சா சாக்லெட் தயாரித்து விற்றவர் கைது


வேத் பிரகாஷ் சோன்கர்

கோவை: கோவை மாவட்டம் மதுரைக்கரையில் அருகே கஞ்சா சாக்லேட் தயாரித்து விற்பனை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை மார்க்கெட் அருகே ஒரு நபர் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக மதுக்கரை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீஸார் இன்று மதுக்கரை மார்க்கெட் அருகே ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது பேருந்து நிறுத்தத்தை ஒட்டிய பகுதியில் இளைஞர் ஒருவர் சந்தேகத்துக்கு உரிய முறையில் நின்று கொண்டிருந்த நபரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் 5 கிலோ கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பிடிபட்ட நபர் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த வேத் பிரகாஷ் சோன்கர் (30) என்பது தெரிந்தது. இவர் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் பீடாக் கடை வைத்திருப்பதும், வட மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சாக்லேட் போல் தயாரித்து விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. இதனிடையே, பிரகாஷை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்த கஞ்சா காக்லேட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.