கோவை தனியார் மருத்துவமனையில் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: உறவினர்கள் மறியல்


கோவை: கோவையில் தனியார் மருத்துவமனையில் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கோவை அவிநாசி சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் இரும்பு உள்ளிட்ட பொருட்களை திருட வந்ததாக நேற்று முன்தினம் ஒருவரை பிடித்து மருத்துவமனை பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். இதில் அந்த நபர் நேற்று அதிகாலை இறந்தார். இது தொடர்பாக பீளமேடு போலீஸார் விசாரித்தனர். அதில் மருத்துவமனை ஊழியர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர் பீளமேடு காந்தி மாநகரைச் சேர்ந்த ராஜன் என தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பாக 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன் உள்ளிட்ட 8 பேரை முதல் கட்டமாக இன்று போலீஸார் கைது செய்தனர். இதில், மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இதற்குகிடையே, உயிரிழந்த ராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

அங்கு அவரது உறவினர்கள் இன்று காலையில் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் ராஜன் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தொடர்புடைய அனைவரது மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜனின் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக் கூடம் முன்புறமுள்ள அரசு கலைக் கல்லூரி சாலையில் இன்று மதியம் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காட்டூர் சரக உதவி ஆணையர் கணேஷ், இன்ஸ்பெக்டர்கள் அர்ஜுன், ராஜ்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு பிரேத பரிசோதனை கூடம் முன்பு திரண்டனர். தொடர்ந்து அவரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.