சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: அச்சத்தில் வெளியேறிய ஊழியர்கள்!


படங்கள் - எஸ்.குரு பிரசாத்

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், அங்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே, ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அச்சமடைந்து கட்டிடத்துக்கு வெளியே வந்தனர்.

சேலம் மாநகரின் மையத்தில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு அரசின் பல்வேறு துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் வந்தது. அதில், மாலை 3 மணி அளவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சேலம் மாநகர போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் ரூபி உதவியுடன் அலுவலகத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் சோதனை மேற்கொண்டனர்.

இதனிடையே, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியானதை தொடர் ந்து, அலுவலக ஊழியர்கள் அச்சமடைந்து, அலுவலக கட்டிடத்திலிருந்து வெளியேறினர்.

x