கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.72 லட்சம், 200 கிராம் தங்கம் பறிமுதல்


கேரள மாநிலம் வேலந்தாவளம் பகுதியில் பிடிபட்டவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்த கேரள போலீஸார்.

கோவை: கோயம்புத்தூர் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.71.50 லட்சம் மற்றும் 200 கிராம் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த கேரள போலீஸார், இது தொடர்பாக மூவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்துக்கு செல்வதற்கு வாளையாறு மற்றும் வேலந்தாவளம் ஆகிய வழித்தடங்கள் முக்கியமானதாக உள்ளன. இந்த வழித்தடங்கள் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், கோவை வழியாக கேரளாவுக்கு பணம் மற்றும் சந்தேகத்துக்குரிய பொருட்களை கடத்தி வருவதாக கேரள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலந்தாவளம் என்ற இடத்தில், கேரள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் மற்றும் கொழிஞ்சாம்பாறை போலீஸார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக அடுத்தடுத்து 2 இருசக்கர வாகனங்களில் வந்த மூவரைப் பிடித்து போலீஸார் சோதனையிட்டனர். அவர்கள் ரூ.71.50 லட்சம் பணம் மற்றும் 200 கிராம் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் கோவை தியாகி குமரன் வீதியைச் சேர்ந்த சாகர்(32), சந்தீப்(35), ராஜவீதியைச் சேர்ந்த மணிகண்டன்(40) என்பதும், உரிய ஆவணங்களின்றி பணம், தங்கத்தைக் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார், அவர்களிடம் இருந்து பணம், தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். அவற்றை யாருக்கு கொடுப்பதற்காக எடுத்துச் சென்றனர், ஹவாலா பணமா, பின்னணியில் இருப்பது யார் என்று போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

x