புதுச்சேரி: புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸுக்கு 5-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் இன்று மாலை வந்தது. ஆளுநர் மாளிகைக்கு தொடர் மிரட்டல் வந்தும் சம்பந்தப்பட்டோரை போலீஸார் கைது செய்யாமல் திணறி வருகின்றனர்.
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநரின் மாளிகையான ராஜ் நிவாஸ் சட்டப்பேரவை ஒட்டியுள்ள கடற்கரை அருகேயுள்ளது. ராஜ் நிவாஸுக்கு மின்னஞ்சல் மூலம் கடந்த சில வாரங்களில் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் தகவலை மர்ம நபர் அனுப்பி வருகிறார். ஏற்கெனவே முதல்வர் வீடு, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று மாலை ராஜ் நிவாஸ் அலுவலக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஐந்தாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் சாதனங்களுடன் பெரிய கடை போலீஸார் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் ராஜ் நிவாஸில் முழு சோதனையில் ஈடுபட்டனர்.
அதன் பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. ஆளுநர் மாளிகைக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளியை போலீஸார் அடையாளம் கண்டு கைது செய்ய இயலாமல் திணறி வருகின்றனர்.