ராமேசுவரம்: தமிழக கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 320 கிலோ சுக்கு, 150 கிலோ ஏலக்காயை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து ஒரு பைபர் படகினை கைப்பற்றினர்.
இலங்கை கடற்படையினர் ரோந்து பணியின்போது சந்தேகத்திற்குரிய முறையில் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கரை பகுதியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஒரு பைபர் படகினை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சோதனை செய்தனர். சோதனையில் 12 மூடைகளில் 320 கிலோ சுக்கு மற்றும் 150 கிலோ ஏலக்காய் இருப்பது கண்டறிந்தனர். உடனடியாக படகுடன் பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சுக்கு மற்றும் ஏலக்காய் அந்நாட்டு சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கடத்தல் தொடர்புடையவர்கள் குறித்து கடற்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறனர்.