மதுரை: பட்டாசு ஆலை பெண் தொழிலாளியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் பட்டாசு ஆலை போர்மேனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து, அவருக்கு சிறையில் வேலை வழங்கவும், வேலைக்கான ஊதியத்தை இரு குழந்தைகளுக்கு சமமாக பிரித்து வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் புளிப்பாரப்பட்டி தீப்பெட்டி ஆலையில் போர்மேனாக பணிபுரிந்தவர் பரமன். இவர் அதே தீப்பெட்டி ஆலையில் பணிபுரிந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கடந்த 2006-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்தப் பெண் கர்ப்பமானார். பின்னர் அவரை திருமணம் செய்ய பரமன் மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக அந்தப் பெண் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்த பரமனை கைது செய்தனர். இந்த வழக்கை ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றம் விசாித்து பரமனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து 2019ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதியில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக பரமன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்து நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் தவறுக்கு சாட்சியுள்ளது. மனுதாரரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதற்காகவே மனுதாரரின் தண்டனையை உறுதி செய்யலாம். இருவரின் சம்மதத்தின் பேரில் நடைபெற்ற உறவு என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையேற்க முடியாது. மெழுகு தீயை ஊற்றி கொலை செய்வதாக மிரட்டி தன்னுடன் உறவு கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு மனுதாரர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த திருமண உறவில் ஆண் குழந்தை உள்ளது. மனுதாரர் தனது சொந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை பாதுகாக்க தவறிவிட்டார். மேலும், அந்தப் பெண்ணை தந்தையில்லாமல் குழந்தையை வளர்க்கவும், பொருளாதாரம், சமூக ரீதியாக துன்பப்படுவதையும், வாழ்நாள் முழுவதும் களங்கத்துடன் வாழும் நிலையை மனுதாரர் உருவாக்கியுள்ளார். இதனால் மனுதாரரின் மேல்முறையீடு மனுவை ஏற்க முடியாது.
மனுதாரரின் செயலால் அவரது மனைவிக்கு பிறந்த குழந்தையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தையும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரு குழந்தைகளும் வளர வேண்டும். எனவே, மனுதாரருக்கு சிறையில் வேலை வழங்க வேண்டும். அந்த வேலைக்காக மனுதாரருக்கு வழங்கப்படும் ஊதியத்தை அவரின் இரு குழந்தைகளுக்கும் சமமாக பிரித்து வழங்க வேண்டும்” என்று தண்டனையை உறுதி செய்ததுடன், மேல்முறையீடு மனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.