பொன்னேரி: பழவேற்காடு அருகே இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ளது, நடுவூர் மாதா குப்பம் மீனவ கிராமம். இந்தக் கிராமத்தினர் பழவேற்காடு ஏரியில் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக நடுவூர் மாதாகுப்பம் மீனவ கிராமத்தில் இரு தரப்பினரிடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதல் காரணமாக போலீஸார், நடுவூர் மாதா குப்பம் மீனவ கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தவர்களில் ஒருவர், வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த சுதாகர் (24). இவர், கடந்த 18-ம் தேதி நள்ளிரவில் வீட்டில் இருந்த 20 வயது இளம் பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, இளம் பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் முதல் கட்ட விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் சுதாகரை போலீஸார் கைது செய்தனர்.