சாத்தான்குளம் அருகே விபத்தில் 5 பேர் பலியான கிணற்றில் இருந்து 37 பவுன் நகைகள் மீட்பு


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கிணற்றுக்குள் கார் பாய்ந்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அந்த பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிச்சந்திரன் விசாரணை நடத்தினார். மேலும், கிணற்றில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு 35 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன்விளையைச் சேர்ந்தவர் மோசஸ்(50). கோவையில் குடும்பத்தோடு வசித்து வரும் இவர், சொந்த ஊரான வெள்ளாளன்விளையில் உள்ள கிறிஸ்தவ ஆலய விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தினர், உறவினர்கள் 8 பேருடன் காரில் வந்துள்ளார்.

இவர்கள் குற்றாலத்துக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் காலை ஊருக்கு வந்துள்ளனர். சாத்தான்குளம் அருகே உள்ள சிந்தாமணி - மீரான்குளம் இடையே வரும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமாக இருந்த சுமார் 50 அடி ஆழம் கொண்ட தரைமட்ட கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் கார் முழுமையாக தண்ணீருக்குள் மூழ்கியது.

இதில் மோசஸ் மகன் கெர்சோம் (29), ரவி கோயில்பிச்சை மகள் ஜெனிபா எஸ்தர், கெர்சோம் மனைவி சைனி கிருபாகரன் (26) ஆகிய 3 பேரும் காருக்குள் இருந்து வெளியே வந்து தண்ணீரில் தத்தளித்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவர்கள் 3 பேரையும் மீட்டனர். மற்ற 5 பேரும் தண்ணீருக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

தீயணைப்பு படையினர் சுமார் 4 மணி நேரம் போராடி ச.ரவி கோயில் பிச்சை (60), அவரது மனைவி ஹெச்சியா கிருபாகரன் (49), தே.மோசஸ் (50), அவரது மனைவி வசந்தா (49), கெர்சோமின் ஒன்றரை வயது குழந்த ஸ்டாலின் ஆகிய 5 பேரின் சடலங்களையும் மீட்டனர். மேலும், விபத்துக்குள்ளான காரும் மீட்கப்பட்டது.

ரூ. 3 லட்சம் நிவாரணம்: இது குறித்து தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்க ளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

35 பவுன் நகை மீட்பு: விபத்து நடந்த மீரான்குளத்தை சேர்ந்த சுவாமியடியான் என்பவருக்கு சொந்தமான அந்த கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நேற்று காலை 10 மணியளவில் தொடங்கப்பட்டது. சுமார் 4 மணி நேரத்துக்கு பின்னர் பிற்பகல் 2 மணியளவில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.

தீயணைப்பு படையினர் கிணற்றுக்குள் இறங்கி உள்ளே கிடந்த 2 பைகளை மீட்டனர். அந்த பைகளில் சுமார் 35 பவுன் தங்க நகைகள், ரூ.7,600 ரொக்கம், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அவைகளை உரிய சோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த கிணற்றை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிச்சந்திரன் நேற்று பார்வையிட் டு ஆய்வு செய்தார். அப்போது சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி, தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோல் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பாத்திமா பர்வின் விபத்துக்கு உள்ளான காரையும், சம்பவ இடத்தையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

x