தென்காசி: வெளிநாடு வாழ் இந்தியரின் 6.18 ஏக்கர் நிலத்தை விற்று மோசடி செய்தவர் கைது!


தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் சுவாமி. வெளிநாடு வாழ் இந்தியரான இவருக்கும், செங்கோட்டை வட்டம், இலத்தூர் ரோடு பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2012, 2013-ம் ஆண்டுகளில் காளிதாஸ் மூலம் சில சொத்துகளை ராமச்சந்திரன் சுவாமி வாங்கியுள்ளார்.

இந்நிலையில், காளிதாஸ் தனது வீட்டின் அருகே உள்ள 7 சென்ட் இடத்தை தருவதாக கூறி, ராமச்சந்திரன் சுவாமியிடம் இருந்து ரூ.10 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு பண்பொழியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து 6.18 ஏக்கர் நிலத்தை 33 லட்சம் ரூபாய்க்கு ராமச் சந்திரன் சுவாமி வாங்கியுள்ளார். பின்னர் அந்த நிலத்தை விற்பனை செய்ய முயன்றபோது, அதனை 2 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து தருவதாக காளிதாஸ் கூறியுள்ளார். இதை நம்பிய ராமச்சந்திரன் சுவாமி, அந்த நிலத்துக்கு காளிதாஸ் பெயரில் பொது அதிகார ஆவணம் செய்து கொடுத்து, பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவதற்காக தனது வங்கி கணக்கை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் பெற்று வழங்கியுள்ளார்.

ஆனால், நீண்ட காலமாகியும் இடம் விற்பனையாகவில்லை என்று காளிதாஸ் கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு ராமச் சந்திரன் சுவாமி ஊருக்கு வந்த போது, அந்த நிலத்தை பார்வையிட சென்றுள்ளார். அப்போது, அந்த நிலத்தை வேறு சிலர் அனுபவித்து வந்ததை பார்த்துள்ளார். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, அந்த நிலத்தை ரூ.1.11 கோடிக்கு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வில்லங்க சான்று எடுத்து பார்த்தபோது, பொது அதிகார ஆவணத்தை பயன்படுத்தி அந்த நிலத்தை காளிதாஸ் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. பணத்தை ராமச்சந்திரன் சுவாமி கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்து, நிலம் இன்னும் விற்பனையாகவில்லை என்று காளிதாஸ் தொடர்ந்து கூறி ஏமாற்றி வந்துள்ளதை அறிந்த ராமச்சந்திரன் சுவாமி இதுகுறித்து காளிதாஸிடம் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்துளளார்.

இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்திடம் ராமச்சந்திரன் சுவாமி புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின்பேரில் தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் காளிதாஸ் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காளிதாஸை போலீஸார் கைது செய்தனர்.

x