மதுரை: குடும்பத் தகராறு பங்காளிச் சண்டையாக மாறிய விவகாரத்தில் துப்பாக்கியால் சுட்டத்தில் சிறுவன் உட்பட 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஓய்வுபெற்ற எல்லைப் பாதுகாப்பு படை வீரரை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள டி. பாறைக்குளத்தைச் சேர்ந்த முத்து மகன்கள் மருதுபாண்டி (45), உதயகுமார் (40), மணிகண்டன் (35).
முத்துவின் தம்பி கருணாநிதியின் மகன் மாரிச்சாமி (40). இவர் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவர்கள் பாறைக் குளத்தில் அருகருகே வசிக்கின்றனர். இவர்களுக்குள் சொத்து மற்றும் பணம், கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்தது.
இந்நிலையில், நேற்று மணிகண்டன் அவரது மனைவி மல்லிகா இடையே பிரச்சினை ஏற்பட்டது. இருவரும் வீட்டுக்கு வெளியே வந்து, ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர். இதையறிந்த மாரிச்சாமி முன்பகையில் மனதில் வைத்து தன்னைத் திட்டுவதாக மணிகண்டனை தட்டிக் கேட்டார். குடும்பச் சண்டை பங்காளி தகராறாக மாறியது.
அங்கு வந்த உதயகுமார் சண்டையை விலக்கிவிட்டார். இருப்பினும், வீட்டுக்குள் சென்று துப்பாக்கியை எடுத்து வந்த மாரிச்சாமி 5 முறை துப்பாக்கியால் சுட்டதில், சகோதரர் உதயகுமாருக்கு விலா, வயிறு பகுதியில் இரண்டு குண்டுகள் பாய்ந்து மயங்கினார். தொடர்ந்து அவர் சுட்டதில் அருகே கடைக்குச் சென்ற கவியரசு மகன் கிஷோருக்கும் (10) வலது கை தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த கூடக்கோவில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, துப்பாக்கி சூட்டில் காயமடைந்த உதயகுமார், கிஷோரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, மாரிச்சாமியை போலீஸார் கைது செய்து, அவரது துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.