பொள்ளாச்சி: விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு!


பொள்ளாச்சியில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியை சேர்ந்தவர் முத்துகுமாரசாமி (54). விவசாயியான இவர், பொள்ளாச்சி- கோவை சாலை, பாரதியார் நகரில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு ஆனைமலை அடுத்த பெத்த நாயக்கனூர் கிராமத்தில் தோட்டம் உள்ளது. கடந்த 16ம் தேதி இரவு முத்து குமார சாமியும், அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு பெத்த நாயக்கனூரில் உள்ள தோட்டத் துக்கு சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு பொள்ளாச்சியில் உள்ள வீட்டுக்கு முத்துகுமாரசாமி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப் பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 50 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து முத்து குமார சாமி பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கை ரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். கோவையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப் பட்டது. போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி ஏஎஸ்பி சிரிஷ்டி சிங் உத்தரவின் பேரில் குற்றப் பிரிவு எஸ்.ஐ.பிரபாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

x