கோவையில் ஆன்லைன் மூலம் நட்பு ஏற்படுத்தி நண்பரிடம் பணம் கேட்டு கடத்திய நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (23). இவருக்கு ஆன்லைன் மூலம் சித்தா புதூரை சேர்ந்த ஸ்ரீகரன் (23) என்பவர் அறிமுகமானார். இருவரும் நட்புடன் பழகி வந்தனர். இந்நிலையில், விக்னேஷிடம், ஸ்ரீகரனிடம் அடிக்கடி பணம் கேட்டு பெற்று வந்தார். இதனால் சந்தேகமடைந்த விக்னேஷ், ஸ்ரீகரன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் விக்னேஷ், ஸ்ரீகரனை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் விக்னேஷ் வீட்டில் இருந்தபோது, ஸ்ரீகரன் தனது நண்பர்கள் கார்த்திக், நிஷாந்த், நிரஞ்சன் ஆகியோருடன் வந்து, விக்னேஷின் கண்ணைக் கட்டி காரில் கடத்தி சென்றார். பின்னர் அவரை தாக்கி ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து, விக்னேஷ் தனது சகோதரர் மூலம் ரூ.10 ஆயிரத்தை செல்போனுக்கு அனுப்பி வைத்தார். அந்தப் பணத்தில் மது குடித்த கும்பல் விக்னேஷை உருட்டுக்கட்டையால் தாக்கி நடுவழியில் இறக்கிவிட்டு சென்றனர்.
இது குறித்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீகரன் உள்ளிட்டோர் மீது ராமநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், பணம் பறிப்பதற்காகவே இந்த கும்பல் ஆன்லைனில் நட்புடன் பழகி மோசடியில் ஈடுபட்டது தெரியவநத்து. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.