ராமநாதபுரம் இளைஞர் மர்ம மரணம்: அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் சாலை மறியல்


ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இளைஞர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி, அரசு மருத்துவமனை முன் அவரது உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்தவர் அப்துல்லா (31). இவரது உடல் திருப்புல்லாணி அருகே திணைகுளம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு சனிக் கிழமை இரவு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று அப்துல்லா உடல் வைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் திடீரென ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இறந்தவரின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், எனவே கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். மேலும், இது குறித்து திருப்புல்லாணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x