கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் 500+ நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்!


கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு விசாரணைக்காக நேற்று 500-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வழக்கின் விசாரணையை வரும் ஜீலை 19-ம் தேதிக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் ஒத்திவைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில், பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஜூலை 17ம் தேதி கனியாமூர் தனியார் பள்ளி வளாகம் முன்பாக நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறி, பள்ளி வளாகம் முழுவதும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.

இதில் பள்ளி வளாகத்தில் இருந்த வாகனங்கள் மட்டுமின்றி பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினரி ன் வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரக்காரர்களால் பல்வேறு பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணையை தமிழக அரசு உடனடியாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு மாற்றம் செய்து உத்தரவிட்ட நிலையில், 615 பேர் மீது, சட்டவிரோதமாக கூடுவது, அத்துமீறி நுழைந்து சூறையாடுதல், தீ வைத்து சேதப்படுத்துதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், திருடுதல் உள்ளிட்ட 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 615 பேர் மீதும் சுமார் 24 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை கடந்த மாதம் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய 615 பேரும் மே 15-ம் தேதி நடுவர் மன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகம் செல்லக்கூடிய கச்சிராபாளையம் அம்பேத்கர் சிலை, வட்டாச்சியர் அலுவலகம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கு விசாரணைக் காக குற்றவியல் நடுவர் மன்றத்தில் நேற்று ஆஜரானதால், கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

615 நபர்களுக்கு இந்த வழக்கில் சம்மன் வழங்கப்பட்ட நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் நடுவர் மன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்மன் அடிப்படையில் அவர்களுக்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, அவர்கள் மீதான குற்றப்பத்திரிக்கை தொடர்பான டிஜிட்டல் நகல்களும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு தொடர்பான விசாரணையை வரும் ஜூலை 19ம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் ரீனா உத்தரவிட்டார்.

x