காரிமங்கலம் அருகே பரோலில் வந்த கைதி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியபுதூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சங்கர் (53). இவரது மனைவி ரத்னா. இவர்களது மகளுக்கு திருணமாகி கணவருடன் கம்பைநல்லூரில் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவி மற்றும் பாட்டியை சங்கர் கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக தண்டனை பெற்ற சங்கர் சிறையில் இருந்து வருகிறார்.
மகளைப் பார்க்க அவ்வப்போது பரோலில் வந்து செல்வார். கடந்த 10ம் தேதி 4 நாட்கள் பரோல் பெற்று வந்த சங்கர் மகளை பார்த்து விட்டு சிறைக்கு திரும்புவதாகக் கூறிச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பெரிய புதூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற சங்கர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீஸார் சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.