சென்னை: கல்லூரி மாணவிக்கு வீடு புகுந்து பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் விசிக தொழிற்சங்க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சென்னை துறைமுகம் மற்றும் கப்பற்கூட தொழிலாளர் விடுதலை முன்னணி தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் நன்மாறன் (63) என்பவர் அங்கு வந்தார்.
அவர் திடீரென வீட்டுக்குள் நுழைந்து மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார்.
அதிர்ச்சி அடைந்த மாணவி அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி வெளியே ஓட்டம் பிடித்தார். இது குறித்து தனது பெற்றோரிடம் அழுதபடி தெரிவித்தார். அவர்கள் இது தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து நன்மாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.