திருச்சி: கடன் தொல்லையால் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று, தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது. திருச்சி மேல கல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ்(42). இவரதுமனைவி விக்டோரியா ஜென்னி (35). அலெக்ஸ் அப்பகுதியில் துணிக் கடை நடத்தி வந்தார்.
விக்டோரியா ரயில்வே ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவர்களது மகள்கள் ஆராதனா(9), ஆலியா(4) ஆகியோர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால், அண்டை வீட்டார் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, ஹாலில் விக்டோரியா தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. உடனே கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மற்றொரு அறையில் அலெக்ஸ் தூக்கிட்ட நிலையிலும், குழந்தைகள் ஆராதனா, ஆலியா ஆகியோர் படுக்கையில் விஷம் குடித்த நிலையிலும் உயிரிழந்து கிடந்தனர்.
தகவலறிந்து வந்த பொன்மலை காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார், ஆய்வாளர் வெற்றிவேல் உள்ளிட்ட போலீஸார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வீட்டில் இருந்த டைரியில், கடன் சுமையால் பாதிக்கப்பட்டதாகவும், உறவினர்கள் யாரும் உதவ முன்வராத நிலையில், கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்வதால் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், 2 குழந்தைகளுக்கும் பெற்றோர் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.