கோவை மதபோதகருக்கு நிபந்தனை ஜாமீன்


போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கோவையைச் சேர்ந்த மத போதகரான ஜான் ஜெபராஜூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்தவ மத போதனைப் பாடல்கள் மூலம் சமூக வலைதளத்தில் பிரபலமானவர் கோவையைச் சேர்ந்த மதபோதகரான ஜான் ஜெப ராஜ். கடந்தாண்டு மே 21 அன்று இவரது வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 2 சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்ததாக இவரை கோவை காந்திபுரம் போலீஸார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்நிலையில் தனக்கு ஜாமீன் கோரி ஜான் ஜெபராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தானும், தனது மனைவி யும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், மனைவி குடும்பத்தினரின் துன்புறுத்தல் காரணமாக தனக்கு எதிராக போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும், எனக்கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.நிர்மல் குமார் முன்பாக நடந்தது. அப்போது ஜான் ஜெபராஜ் தரப்பில் வழக்கறிஞர் எம்.மாளவியா ஆஜராகி, இந்த புகார் உள்நோக்கம் கொண்டது என வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

விசாரணைக்கு இடையூறு செய்யக்கூடாது. தேவைப்படும் போது விசாரணை அதிகாரி முன்பாக ஆஜராக வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

x