அரசுப் பேருந்தில் இருந்து 9 மாத குழந்தை தவறிவிழுந்து உயிரிழந்த விவகாரத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரியைச் சேர்ந்தவர் ராஜ துரை. இவரது மனைவி முத்து லட்சுமி. கோவை ராமநாதபுரத்தில் குடும்பத்துடன் தங்கி, வேலைக்குச் சென்று வருகிறார். கடந்த 12ம் தேதி ராஜ துரை, மனைவி முத்து லட்சுமி, மகள் ஸ்ரீ ரேணுகா (7), ஒன்பது மாதமான மகன் நவநீஷ் ஆகியோருடன் சேலத்தில் இருந்து கோவைக்கு அரசுப் பேருந்தில் வந்து கொண்டிருந்தார். பேருந்தின் முன்பக்க கதவு அருகேயுள்ள மூன்று இருக்கை கொண்ட சீட்டில் அமர்ந்து பயணித்தனர். பேருந்து சங்க கிரியை அடுத்த வளையக்காரனூர் மேம்பாலத்தில் சென்ற போது, ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தார்.
அப்போது, பேருந்தின் முன்பக்க கதவு மூடப்படாமல் திறந்து இருந்தது. இதில், ராஜ துரையின் தோளில் தூங்கிக் கொண்டிருந்த 9 மாத குழந்தையான நவ நீஷ், முன்பக்க படிக்கட்டு வழியாக சாலையில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தேவூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கோவை உப்பிலிபாளையம் பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்து கடந்த 12ம் தேதி இரவு புறப்பட்டு குமாரபாளையம் அருகே வந்த போது, அதில் பயணித்த 9 மாத குழந்தை கீழே விழுந்து உயிரிழந்தது.
இச்சம்பவம் தூக்கத்தில் இருந்த தந்தையின் கவனக்குறைவாலும், பேருந்தின் முன்பக்க கதவை மூடாத நிலையில் பேருந்தை இயக்கியதாலும் ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட சம்பவம் தொடர்பாக பேருந்தில் பணியில் இருந்த ஓட்டுநர் சிவன் மணி மற்றும் நடத்துநர் பழனிசாமி ஆகிய இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.