கோவையில், மறைத்து வைத்த துப்பாக்கியை எடுத்து தருவது போல, போலீஸாரை சுட்டு விட்டு தப்ப முயன்ற நபர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் காயமடைந்தார்.
கோவை காளப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு, மதுக்கடை அருகே வாகனத்தை எடுப்பது தொடர்பாக இரு இளைஞர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு தரப்பைச் சேர்ந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, எதிர் தரப்பினரை மிரட்டி, வானத்தை நோக்கி சுட்டார். துப்பாக்கி குண்டு சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கோவில் பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.
அதில், துப்பாக்கியை வானில் சுட்டு மிரட்டியவர் சரவணம்பட்டி காப்பிக்கடை ரத்தினகிரி வீதியைச் சேர்ந்த ஹரி ஸ்ரீ (23) எனவும், ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் ஹரி ஸ்ரீயை நேற்று கைது செய்தனர். இதற்கிடையே, மறைத்து வைத்த துப்பாக்கியை பறிமுதல் செய்ய போலீஸார் நேற்று ஹரி ஸ்ரீயை அழைத்துச் சென்றனர்.
அப்போது ஹரி ஸ்ரீ துப்பாக்கியை எடுத்து போலீஸாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றார். தற்காகப்புக்காக போலீஸார் தங்களது துப்பாக்கி யை எடுத்து ஹரி ஸ்ரீயின் காலில் சுட்டனர். இதில் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இது குறித்து போலீஸார் கூறும்போது, "கைது செய்யப்பட்ட ஹரி ஸ்ரீ மீது துப்பாக்கி வைத்திருந்ததாக, பீளமேடு காவல் நிலையத்தில், ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் முன்னரே வழக்கு உள்ளது. இந்த நாட்டுத் துப்பாக்கியை ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வாங்கியதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது" என்றனர்.