விழுப்புரம்: இளம் பெண்ணை ஏமாற்றிய இளைஞருக்கு 10 ஆண்டு சிறை


குமரேசன்

விழுப்புரம்: விழுப்புரத்தில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் இன்று (மே 14) தீர்ப்பு வழங்கியது.

சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் தேவியார்குறிச்சி, ராஜா தெருவில் வசிப்பவர் பொன்னுசாமி மகன் குமரேசன் (36). இவர் விடுத்த மிஸ்டு கால் மூலம், விழுப்புரம் அடுத்த கோலியனூரில் வசிக்கும் 20 வயது இளம் பெண்ணுடன் கடந்த 2016-ல் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி, தனிமையில் சந்தித்துள்ளனர்.

இதனால், இளம்பெண் கர்ப்பமானார். இதையடுத்து திருமணம் செய்து கொள்ள குமரேசன் மறுத்துள்ளார். இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸார் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்து குமரேசனை கைது செய்தனர்.

இந்த வழக்கின் மீதான விசாரணை, விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை முடிந்து இன்று (மே 14) தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், குமரேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் குமரேசன் அடைக்கப்பட்டார்.

x