கிருஷ்ணகிரி: ஆந்திராவில் இருந்து பாக்கு மட்டைக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை வாகனத்துடன், பர்கூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையிலான போலீஸார் இன்று காலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பசவண்ணா கோவில் - பர்கூர் சாலையில் காரகுப்பம் வங்கி அருகே ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி நோக்கி ஒரு சரக்கு வாகனம் வேகமாக வந்துள்ளது.
போலீஸார் வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டியும் நிற்காமல் காரகுப்பம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் வலது புறமாக திரும்பி கிருஷ்ணகிரி நோக்கி வேகமாக சென்றுள்ளது. இதில், சந்தேகம் அடைந்த போலீஸார், வாகனத்தை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
அப்போது, கந்தி குப்பத்தில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெறும் இடம் அருகில் சரக்கு வாகனத்தை நிறுத்திய ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்து சென்றார். இதையடுத்து போலீஸார் வாகனத்தை சோதனை செய்ததில், பாக்கு மட்டைக்குள் மறைத்து வைத்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது.
அதன்படி, 114 பைகளில் 2,570 கிலோ 500 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, ஹான்ஸ், பான் மசாலா, கூலிப் உள்ளிட்டவை இருந்தது. இதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 7 ஆயிரத்து 520 ஆகும். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், குட்கா பொருட்களுடன் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடி வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், ஆந்திராவில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது. மேலும், குட்கா கடத்திச் சென்ற வாகனத்தை துரத்திச் சென்று பிடித்த பர்கூர் போலீஸாரை, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்க துரை, டிஎஸ்பி முத்து கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.