வாலாஜா அருகே பெண்ணை வெட்டிக்கொலை செய்த வழக்கில் பைனான்சியரை காவல்துறையினர் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பொதிகை நகர் பகுதியில் வசித்து வருபவர் காமேஷ் (43), பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்நிலையில், வாலாஜா அடுத்த அணைக்கட்டு சாலை அருகே உள்ள இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்தவர் சங்கர் ராஜ் (50). இவரது மனைவி சாந்தினி (47). தம்பதியருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சாந்தினி மற்றும் சங்கர் ராஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அணைக்கட்டு சாலை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சாந்தினி பணிபுரிந்து வந்தார். அங்கு அவ்வப் போது காமேஷ் வந்துச்செல்வது வழக்கம். அப்போது, சாந்தினி மற்றும் காமேஷ் இடையே கூடாநட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் பழகி வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக காமேஷ் பொதிகை நகர் பகுதியில் வசிக்கும் வாடகை வீட்டிலேயே சாந்தினியும் தங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, காமேஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் தெரிந்த சாந்தினி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க பணம் கொடுக்குமாறு காமேஷிடம் கேட்டு வந்தார். இதனால், இருவருக்குமிடையே கடந்த சில வாரங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. காமேஷ் தொழிலிலும் சமீப நாட்களாக நஷ்டத்தை சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் வீட்டில் சாந்தினி மற்றும் காமேஷிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் காமேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாந்தினியை வெட்டிக்கொலை செய்தார். இதற்கிடையே, காமேஷ் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றுவிட்டார். இரவு முழுவதும் வெளியில் சுற்றிவிட்டு, நேற்று காலை வாலாஜா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சாந்தினியை கொலை செய்த விவரத்தை காவல்துறையினரிடம் தெரிவித்தார். தகவலறிந்த வாலாஜா காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று உயிரிழந்த சாந்தினி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வாலாஜா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வாலாஜா வட்டாரத்தில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.