ஜோலார்பேட்டை: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மருந்து விற்பனையாளர், தனது மனைவி, 9 வயது மகளுடன் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றார். பின்னர், அங்கிருந்து காச்சிகுடா-நாகர்கோவில் விரைவு ரயிலில் ஊர் திரும்பினர்.
முன்பதிவு பெட்டியில் ஒரு இருக்கையில் சிறுமியும், மற்றவர்கள் அடுத்தடுத்து இருக்கைகளிலும் பயணித்தனர். காட்பாடியிலிருந்து ஜோலார்பேட்டைக்கு ரயில் சென்றபோது, 30 வயது இளைஞர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டார்.
உடனே அந்த இளைஞர் அங்கிருந்து தலைமறைவானார். குடும்பத்தினர் மற்றும் சக பயணிகள் தேடியபோது, கழிவறை அருகே அந்த இளைஞர் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கி, ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரியைச் சேர்ந்த குமார் (30) என்பது தெரியவந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்த போலீஸார், திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.