வெள்ளியங்கிரி மலை ஏறிய பள்ளி மாணவர் உயிரிழப்பு


கோவையில் வெள்ளியங்கிரி மலை ஏறிய 10-ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் சிலுவாத்தூர் கம்பராம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் விஷ்வா அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, முருகன், மகன் விஷ்வா உள்ளிட்ட உறவினர்கள் வெள்ளியங்கிரி மலை செல்வதற்காக நேற்று முன்தினம் கோவை வந்தனர். பூண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்துக்கு சென்று அங்கிருந்து மலை ஏறினர். 7-வது மலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை அனைவரும் மலையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். 3-வது மலைக்கு வந்த போது திடீரென விஷ்வா மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அதிர்ச்சி அடைந்த முருகன் மற்றும் உறவினர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து மயங்கிய நிலையில் கிடந்த விஷ்வாவை டோலி கட்டி கீழே கொண்டு வந்தனர்.

மலை அடிவாரத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்தனர். அதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து ஆலாந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x