ஐபோனை ரூ.7,000-க்கு தருவதாக மோசடி - புதுச்சேரியில் பலரிடம் பணம் பறித்த இருவர் கைது


புதுச்சேரி: ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோனை ரூ.7 ஆயிரத்துக்கு கொடுப்பதாக வாட்ஸ்-அப், இன்ஸ்டா கிராமில் விளம்பரம் செய்து தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பலரிடம் லட்சக்கணக்கில் பணம் ஏமாற்றிய இளைஞர்கள் இருவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் இன்ஸ்டாகிராமில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன் 15-ஐ ரூ.7 ஆயிரத்துக்கு தருகிறோம் என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். அதனை உண்மை என நம்பிய அவர் விளம்பரத்தை பதிவிட்ட நபர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பிறகு அவர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு மூன்று தவணைகளாக பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால், அந்த நபர்கள் தாங்கள் சொன்னது போல போனை தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதனால் ரஞ்சித் தான் அனுப்பிய பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர்கள் மிரட்டும் தோனியில் பேசியதோடு நாங்கள் மிகுந்த பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களை நெருங்கிப்பார் என்று சவால் விட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித் இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்.பி பாஸ்கரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் குறைந்த விலைக்கு ஐ-போன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது புதுச்சேரியைச் சேர்ந்த மாதேஷ் (22), திருச்சி அவணியாபுரத்தைச் சேர்ந்த சஜித் அகமது (19) ஆகியோர் என்பதும், இவர்கள் வாட்ஸ்-அப், இன்ஸ்டா கிராமில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோனை குறைந்த விலைக்கு தருகிறோம் என்று விளம்பரம் செய்து தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பலரிடம் பணம் பறித்ததும், இதற்கு மூளையாக சஜித் அகமது செயல்பட்டதும், ஏமாற்றிய பணத்தில் சொகுது வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது.

மேலும் ஐடிஐ முடித்துள்ள மாதேஷ் 6 மொழிகளை சரளமாக பேசும் திறன் கொண்டவர் என்பதும், தேக்கு வாண்டோ விளையாட்டு போட்டியில் மூன்று தங்க பதக்கங்களை பெற்றுள்ளார் என்பதும், கைது செய்யப் பட்டவர்களின் செல்போன் எண்களை வைத்து நேஷனல் சைபர் கிரைம் போர்டல் மூலமாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் சோதனை செய்த போது 43 புகார்கள் இவர்கள் மீது இதுவரை பதிவாகியிருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து மாதேஷ், சஜித் அகமது இருவரையும் கைது செய்த போலீஸார் ரூ.1.30 லட்சம் ரொக்க பணம், ஒரு லேப்-டாப், 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு வங்கி கணக்கை கொடுத்து உதவிய நண்பர்களையும் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சிறப்பாக செயல்பட்டு மோசடி நபர்களை கைது செய்த போலீஸாரை சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா பாராட்டினார். அப்போது அவர் இணைய வழியில் வருகின்ற எந்த விலை குறைந்த பொரட்களையும் வாங்கி ஏமாற வேண்டாம். இதே போன்று சென்ற ஆண்டு மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

x