அரியலூர் அருகே மகளை கொன்ற தந்தை தற்கொலை?


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ரவி (49). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி தாமரைச்செல்வி, மகள்கள் ரஞ்சனி (21), சந்தியா (17). பிளஸ் 2 தேர்வில் 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்த சந்தியா, கல்லூரி சேர தயாராகி வந்தார்.

தங்கள் வயலில் கட்டி வரும் வீட்டில் தாமரைச் செல்வி, ரஞ்சனி ஆகியோர் நேற்று முன்தினம் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு சந்தியா மதிய உணவு சமைத்து, ரவியிடம் கொடுத்து அனுப்புவது வழக்கம். ஆனால், நேற்று முன்தினம் வெகு நேரமாகியும் ரவி சாப்பாடு எடுத்து வராததால், தாமரைச் செல்வி அவரை செல்போனில் அழைத்தார். ஆனால், ரவி அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து, மாலையில் வீடு திரும்பிச் சென்று பார்த்த போது, சந்தியா தரையிலும், அவருக்கு அருகில் ரவி தூக்கிட்ட நிலையிலும் உயிரிழந்து கிடந்தனர்.

தகவலறிந்து ஆண்டிமடம் போலீஸார் சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாவட்ட எஸ்பி தீபக் சிவாச் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். சந்தியாவின் கழுத்து கயிற்றால் நெரிக்கப்பட்டதற்கான தடயங்களை போலீஸார் கண்டறிந்தனர்.

எப்போதும் செல்போனில் நேரம் செலவிடுவது தொடர்பாக சந்தியாவை தொடர்ந்து ரவி கண்டித்து வந்துள்ளார். இது தொடர்பாக தந்தை, மகள் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல, 2 பேருக்கும் நேற்று முன்தினம் தகராறு நேரிட்டு, அப்போது மகளைக் கொலை செய்து விட்டு, ரவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

x