கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு அளித்தார்.
கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹேரன்பால், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் இருந்து, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 2019 ஏப்ரல் 25-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கின் முதல் குற்றப்பத்திரிகை 2019 மே 24-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் குற்றப்பத்திரிகை 2021 பிப்ரவரி, செப்டம்பர் ஆகிய மாதங்களில் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணை தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு ஏற்பாடாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் தனி அறையில் விசாரிக்கப்பட்டு வந்தது.
வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஒருவர் தவிர மீதமுள்ள 7 பேர் வாக்குமூலம் அளித்தனர். அதன்பேரில் கடந்த 2023 பிப்ரவரி 24-ம் தேதி முதல் நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் சாட்சி விசாரணை தொடங்கி நடந்து வந்தது. கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தப்பட்டு வந்தது. மூடப்பட்ட தனி அறையில் விசாரணை நடந்தது.
விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அண்மையில் கைதான 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி நந்தினி தேவி, சாட்சி விசாரணை குறித்து தனித்தனியாக சுமார் 50 கேள்விகளை கேட்டார்.
தொடர்ந்து எதிர்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி நகர சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவரிடம் விசாரணை நடைபெற்றது. வழக்கில் அரசு மற்றும் எதிர்தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு மே 13-ம் தேதி வழங்கப்படும் என மகளிர் நீதிமன்றம் அறிவித்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவியை, கரூர் குடும்ப நல நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆரம்பம் முதல் விசாரணை நடத்தி வரும் நீதிபதி நந்தினி தேவி, மறு உத்தரவு வரும் வரை அதே நீதிமன்றத்தில் பணிபுரிவார் என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்திருந்தார். இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி இன்று (மே 13) தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பு அறிவிக்கப்படும் என உத்தரவிடப்பட்ட நிலையில் கைதான 9 பேரும் இன்று காலை சேலம் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி தனது தீர்ப்பில் அறிவித்தார்.
இதுகுறித்து சிபிஐ அரசு தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் கூறும்போது, "வழக்கில் கைதான ஒன்பது பேருக்கும் உச்சபட்சமாக சாகும் வரை தண்டனை வழங்க வேண்டும் என்றும், குறைந்தபட்சமாக 20 ஆண்டு தண்டனை வழங்கப்படும். தண்டனை விவரம் மதியம் 12 மணிக்கு வெளியாகும்” என்றார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு நீதிமன்றத்தில் நேற்று மாலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
48 சாட்சிகள்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 48 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கில் லேப்டாப், செல்போன், மெமரிகார்டு, கார் உள்ளிட்ட 30 எலக்ட்ரானிக்ஸ் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றப்பத்திரிகை 390 பக்கங்கள் என வழக்கு விசாரணை ஆவணங்கள் மொத்தம் 1,500 பக்கங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்திய தண்டனை சட்ட பிரிவில் 120பி, 366, 342, 354 (ஏ), 354 (பி), 376 (டி), 376 (2) (என்), 509 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்ட பிரிவு 4 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அரசு தரப்பில் சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன், எதிர்தரப்பில் வழக்கறிஞர் பாண்டிராஜ் ஆகியோர் ஆஜராகினர்.