சேலம் சூரமங்கலத்தில், வயதான தம்பதி அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து, அவர்களை கொலை செய்த வழக்கில், அதே பகுதியில் வசித்து வந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அவரிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சேலம் சூரமங்கலத்தை அடுத்துள்ள ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (70), அவரது மனைவி வித்யா (65) ஆகியோர், தங்களது வீட்டின் ஒரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தனர். வீட்டின் மாடியில் அவர்களது இளைய மகன் வாசுதேவன், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில், வாசுதேவன் மாடியில் இருந்து கீழ் தளத்துக்கு வந்தபோது, அவரது தாய் வித்யா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததையும், அவரது தந்தை பாஸ்கரன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்ததையும் கண்டார். உடனடியாக, அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே பாஸ்கரன் உயிரிழந்தார். மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதியில், வீட்டில் இருந்த இருவர் பகல் வேளையில் கொலை செய்யப்பட்டது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, சேலம் சூரமங்கலம் போலீஸார், பாஸ்கரன் வீட்டுக்கு வந்து, வித்யாவின் உடலை மீட்டு விசாரணையைத் தொடங்கினர். சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, துணை ஆணையர் சிவராமன் உள்ளிட்டோர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும், 5 தனிப் படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டும், அப்பகுதி வீடுகளில் இருந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியில் வசித்து வந்த சந்தோஷ் குமார் (30) என்பவர், தம்பதியரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது:
டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான சந்தோஷ்குமார், 15 ஆண்டுகளுக்கு முன்னர் சேலத்தில் குடியேறி விட்டதுடன், சேலத்தில் வசித்து வரும் சுனில் குமார் என்பவரின் மகளை திருமணம் செய்து கொண்டு, 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடன் பிரச்சினையில் இருந்து வந்த சந்தோஷ் குமார், மளிகைக் கடை நடத்தி வந்த வித்யா, அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோர் நகைகளை அணிந்திருந்ததைக் கவனித்துள்ளார். எனவே, அவர்களது நகைகளை கொள்ளையடித்தால், கடன் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளார். அதன்படி, பாஸ்கரனின் கடைக்குச் சென்று, குளிர்பானம் வாங்கிக் குடிப்பது போல கடையின் அருகிலேயே நின்றிருந்திருக்கிறார்.
பாஸ்கரனும், அவரது மனைவியும் வீட்டுக்குள் சென்று சாப்பிடுவதைக் கவனித்து, வீட்டுக்குள் புகுந்து, இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு, அவர்கள் அணிந்திருந்த 10.5 பவுன் நகைகளைக் கொள்ளையடித்து விட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சந்தோஷ் குமாரிடம் இருந்து, 10.5 பவுன் நகைகளும், ரத்தக் கறை படிந்த உடையையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சந்தோஷ்குமாரை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.